×

வலங்கைமான் பேரூராட்சி பகுதி நூலகத்திற்கு கட்டிடம் கட்டி தராவிட்டால் போராட்டம்

வலங்கைமான், ஜூன் 21: வலங்கைமான் பேரூராட்சிப் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கிவரும் நூலகத்திற்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பொன்விழா கண்ட நூலகம் செயல்பட்டு வருகின்றது.

இந்நூலகத்திற்கென சொந்தமாக கட்டிடம் இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் ஓட்டினால் ஆன வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது . இந்நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது செயல்படும் நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து உத்திரங்கள் உடைந்தும், ஓடுகள் சரிந்தும் காணப்படுகின்றது. அதனால் நூலகத்திற்கு வாசகர்கள் அச்சத்துடனே வந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வைப்பதற்கு போதிய இடம் இன்றியும், புத்தகங்கள் பழுதடையும் நிலையிலும் உள்ளது.

எனவே வருங்கால மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மேலும் கால தாமதம் இல்லாமல் உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரை தற்போது நூலகம் செயல்பட்டு வரும் கட்டிடத்தின் ஆபத்தான நிலையினை உணர்ந்து பயன்பாட்டில் இல்லாத பழைய பேரூராட்சி மற்றும் வேளாண்மை அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உதயகுமார் அறிவித்துள்ளார்.

Tags : area library ,
× RELATED கேத்தி பாலாடா பகுதியில் நூலகத்தில் மழைநீர் புகுந்து புத்தகங்கள் சேதம்