×

தென்னை நிவாரணம் வழங்கியதில் அதிகாரிகள் மோசடி

முத்துப்பேட்டை, ஜூன் 21: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கோவிலடியைச் சேர்ந்த சாமிதுரை மகன் வீரக்குமார். அதேபோல் தில்லைவிளாகம் எடையார்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராசு மகன் அய்யப்பன் ஆகியோர் தலைமையில் கிராமவாசிகள் நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறுகையில்:
திருத்துறைப்பூண்டி வட்டம் 85 தில்லைவிளாகம் வருவாய் கிராமத்தில் 2018ம் ஆண்டு கஜா புயல் காரணமாக ஏற்பட்ட தென்னைமர சேதத்திற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட நிவாரண இழப்பீடு தொகையில் பல லட்சங்கள் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் தில்லைவிளாகம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் பல லட்சங்களை பினாமி பெயரிலும் தென்னைமரம் இல்லாதவர்கள் பெயரிலும் லட்சத்திற்கு 10,000 வீதம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு பணத்தை முறைகேடு செய்து உள்ளார். இந்த விஏஓ கடந்த ஆண்டு பசலியில் பலரது இடத்திற்கு பசலியில் நெல் சாகுபடி என அடங்கலில் பதிந்து சான்று வழங்கி உள்ளார்.

இந்த ஆண்டு நடப்பு பசலியில் அதே இடத்திற்கு தென்னை சாகுபடி எனவும் அடங்கலில் பதிந்து தான் இந்த செய்த ஊழலை மறைத்துள்ளார்.
ஆகவே இன்று நடைபெறும் கிராம ஜமாபந்தி நிகழ்வில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அவர் செய்துள்ள மோசடியை கண்டு பிடிக்கும் விதமாக ஆவணங்களை ஆய்வு செய்து அவருடைய முறைகேட்டை கண்டுபிடித்து அவர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கிராமத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து அய்யப்பன்கூறுகையில்:
இன்று (நேற்று) திருத்துறைப்பூண்டியில் நடந்த எங்க கிராம ஜமாபந்தி நிகழ்வில் வட்டவழங்கல் அலுவலரிடம் இந்த மிகப்பெரிய மோசடி குறித்து முறைப்படி கிராம மக்கள் அனைவரும் கையெழுத்து போட்டு புகார் மனு கொடுத்துள்ளோம். நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம் விரைவில் நடவடிக்கை இல்லாதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக எந்தவிதமான போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்று விரைவில் அறிவிப்போம்.
நீதிமன்றத்தையும் விரைவில் நாட இருக்கின்றோம் என்றார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு