×

சோலார் பேட்டரி சர்வீஸ் செய்வதாக கூறி வீட்டில் 9 பவுன் நகையை சுருட்டிய வாலிபருக்கு வலை

மணப்பாறை, ஜூன் 21: மணப்பாாறை அருகே சோலார் பேட்டரி சர்வீஸ் செய்வதாக கூறி 9 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கில்லாடி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மணப்பாறை அருகே அனுக்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி(32), தனியார் கம்பெனி பணியாளர். இவர் அரசு வழங்கிய பசுமை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ரேவதி வீட்டில் உள்ள சோலார் மின்விளக்கு எரியவில்லை. இந்நிலையில் நேற்று ரேவதியின் வீட்டிற்கு சோலார் பேட்டரி சர்வீஸ் செய்வதாக கூறி வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த பேட்டரியை கழற்றி எடுத்துக்கொண்டு, சரி செய்து மீண்டும் கொண்டு வருவதாக புறப்பட்டார். பின்னர் தனது வேலைக்கு செல்ல நேரமாகிவிட்டதாக ரேவதியும் தனியார் கம்பெனிக்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர் மாலை நேரத்தில் ரேவதியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

ரேவதியின் மகன் அஜித் வீட்டில் இருந்ததைக்கண்ட அந்த வாலிபர் தம்பி உங்க வீட்டு சோலார் விளக்கை சரி செய்வதற்காக வந்துள்ளேன். நீ மாடியில் சென்று சோலார் பேனலை பார்த்துக்கொள் நான் வீட்டிற்கு உள்ளே சென்று சரி செய்கிறேன் எனக்கூறிய அந்த வாலிபர் வெளியே வந்து தம்பி நான் உள்ளே சரி செய்துவிட்டேன்.

எங்கள் அலுவலகத்தில் இருந்து பேட்டரியை கொண்டு வருகிறார்கள். நாம் சென்று வாங்கி வரலாம் எனக்கூறி அஜித்தையும் தனது டூவீலரில் அழைத்துக்கொண்டு வையம்பட்டி அருகே ஆசாத் ரோடு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வரை சென்ற அந்த வாலிபர் அஜித்தை இறக்கிவிட்டு, தம்பி நீ வீட்டுக்கு செல் நான் பேட்டரியை வாங்கி வருவதாக கூறி தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது பணி நேரம் முடிந்து பகல் 12 மணிக்கு வீட்டிற்கு வந்தார் ரேவதி. பின்னர் காலையில் எழுந்து பார்க்கையில் பீரோவின் கீழே ரூ.400 கிடந்துள்ளது. இதனை கண்ட அவர், பீரோவில் வைத்த பணம் எப்படி கீழே விழுந்தது என பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளேயிருந்த செயின், தோடு உள்ளிட்ட 9 பவுன் நகை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரேவதி வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த கில்லாடி வாலிபரை  தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு