×

குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை  எடுக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையின் பல இடங்களில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் குடிநீருக்காக மக்கள் காலி இடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டிய தமிழக அரசு மெத்தனமாக உள்ளதை கண்டித்து திமுகவினர் சென்னையின் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி,  வடசென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி திமுக சார்பில் பெரம்பூர்  வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது  காலி குடங்களுடன் திரண்ட திமுகவினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில்,  திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி, கொளத்தூர் தொகுதி பகுதி செயலாளர்கள்  முரளிதரன், நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர் உள்ளிட்ட 300க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், ஆயிரம் விளக்கு  பகுதி செயலாளர் அன்புதுரை தலைமையில் நேற்று காலை திமுகவினர் அப்பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏராளமானோர் கலந்துகொண்ட  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை  போக்காத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காத குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் திமுகவினர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் நேற்று ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரண்டு மறியலில் ஈடுப்பட்டனர்.  பின்னர், 165வது வார்டு திமுக செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஊர்வலமாக சென்று, ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் உள்ள குடிநீர் வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து, ஆதம்பாக்கம் போலீசார் மற்றும்  ஆலந்தூர் மண்டல குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், ஏரியா பொறியாளர் அனிதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதிகள்  எஸ்.ரத்தினம், வேலவன், ஜி.ரமேஷ், உதயகுமார், பூவராகவன், சுப்புராஜ் ஆகியோரும் காங்கிரஸ் மண்டல தலைவர் என்.சீதாபதி, விடுதலை சிறுத்தைகள் பகுதி செயலாளர் சீராளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆவடி: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, மேட்டூர்  பாரதிதாசன் நகர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 மாதங்களாக  முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஏஐடியுசி கட்டிட  தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று நூற்றுக்கும்  மேற்பட்ட பொதுமக்கள் காலி  குடங்களுடன் சூரப்பட்டு நீரேற்று நிலையத்தை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், மண்டல  பொறியாளர் பிரதீபா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தித்கு விரைந்து வந்து  போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  சூரப்பட்டு பகுதிகளுக்கு முறையான குடிநீர் வழங்கவும், வாட்டர் டேங்க்  இல்லாத இடத்தில் புதிதாக அமைக்கவும், டேங்குகளை பராமரிக்கவும் உத்தரவாதம்  அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

Tags : DMK ,government ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி