தேனாம்பேட்டை அண்ணா சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்: டிரைவருக்கு தர்ம அடி

சென்னை: தேனாம்பேட்டை அண்ணா சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவரை பொதுமக்கள் தாக்கியதால் சக டிரைவர்கள் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து மாநகர பஸ் (த.எ.221) நேற்று மாலை திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் குருமூர்த்தி பஸ்சை ஓட்டினார். அண்ணா சாலையில் தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பஸ் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் நின்ற ஆட்டோ மீது மோதியதுடன், நடைபாதை மீது ஏறி நின்றது. இதில் ஆட்டோவில் அமர்ந்து இருந்த மாலதி, சாலையில் நடந்து சென்ற அஞ்சலி என்பவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் டிரைவர் குருமூர்த்தியை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது. மாநகர பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் சக டிரைவர்களுக்கு பரவியதை தொடர்ந்து அண்ணா சாலையில் வந்த மாநகர பஸ்களை அனைவரும் ஆங்காங்கே நடுரோட்டில் நிறுத்திவிட்டு குருமூர்த்தியை தாக்கிய பொதுமக்களை தாக்க முயன்றனர். இதனால் பொதுமக்களுக்கும் மாநகர பஸ் டிரைவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் சமாதானத்தில் ஈடுபட்டனர். விபத்து குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, டிரைவர் குருமூர்த்தி தன்னை தாக்கியதாக பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் பொதுமக்கள் சார்பில் பஸ் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், தங்களை தாக்க முயன்ற டிரைவர் மீது புகார் அளித்தனர். அப்போது, டிரைவரை தாக்கிய நபர்களை கைது செய்யும் வரை நாங்கள் பஸ்களை எடுக்க மாட்டோம் என்று சாலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாநகர பஸ் டிரைவர் குருமூர்த்தி கொடுத்த புகாரின்படி ஆட்டோ ஓட்டுநர்களான பிரபாகரன், கேசவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் 1 மணி நேரத்திற்கு மேல் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: