பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டின கயிறு அறுந்து விபத்து: ஏராளமானோர் உயிர் தப்பினர்

சென்னை1: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும், “ப்ரீ பால் டவர்” எனும் விளையாட்டும் உண்டு. நீண்ட உயரத்திற்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் மத்தியில் இரும்பு தொட்டில் போல் ராட்டினம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் அமர்ந்தவுடன் மேலே சென்று, வேகமாக கீழே  இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.   தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி உள்ளனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்த ராட்டினத்தின் இரும்பு கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. உயரமான பகுதியில் சென்றபோது இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும்.

கீழ் பகுதியில் இருந்தபோது, ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த விளையாட்டு  உபகரணம் மட்டும் தற்காலிகமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. ராட்டின கயிறு அறுந்த காட்சிகளை அங்கு  சென்ற ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அங்கு வந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த பொழுதுபோக்கு பூங்காவுக்கு கோடை காலம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள இயந்திரங்களின் தன்மை, பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதா என  பூங்கா நிர்வாகம் கவனிப்பதில்லை. இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: