×

பாரபட்சமாக தண்ணீர் வழங்குவதை கண்டித்து குடிநீர் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

ஆலந்தூர், ஜூன் 21: பாரபட்சமாக குடிநீர் வழங்கும் அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், ஆதம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதம்பாக்கம் 161, 163வது வார்டுகளில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில்,   குடிநீர் வாரியம் சார்பில், 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து வீடுகளுக்கு பொது குழாய்கள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பகுதி மக்களுக்கு  பொது குழாய்கள் மூலம்  குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர், மக்கள் கோரிக்கையை ஏற்று லாரிகள், மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. அதையும் கடந்த சில நாட்களாக முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதிகளுக்கு மட்டும் பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், மேற்கண்ட வார்டு மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.இதனால், ஆத்திரமடைந்த மக்கள், ஒருதலைபட்சமாக செயல்படும்   குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரண்டனர். அங்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.பின்னர், 165வது வார்டு திமுக செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில், ஊர்வலமாக சென்று, ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் உள்ள குடிநீர் வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘பாரபட்சமின்றி குழாய் மூலம் குடிநீர்  வழங்க வேண்டும்’’ என கோஷமிட்டனர்.

தகவலறிந்து, ஆதம்பாக்கம் போலீசார் மற்றும்  ஆலந்தூர் மண்டல குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், ஏரியா பொறியாளர் அனிதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ‘‘நீர்வரத்து குறைவாக உள்ளதால், குழாய் மூலம் குடிநீர் வழங்கமுடியவில்லை. சீரான பிறகு, முறையாக  குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குகிறோம்’’ என்றனர். அதற்கு ‘‘நீர்வரத்து குறைவாக இருந்தால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது எப்படி?’’ என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், தங்களது பகுதிக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கினால் மட்டுமே கலைந்து செல்வோம்’’ என திட்டவட்டமாக கூறினர்.
இதைதொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகள் இன்று (நேற்று) மாலைக்குள் தண்ணீர் வழங்குவதாக  உறுதியளித்தனர். இதையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...