×

அதிகாரிகளின் மெத்தனத்தால் கீழ்வசலை கிராமத்தில் தொட்டியில் இருந்து வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கும் குடிநீர்

செய்யூர், ஜூன் 21: சித்தாமூர் அருகே தொன்னாட்டில் இருந்து, வேட்டூர் செல்லும் சாலையில் கீழ்வசலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு 50க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம் ஒன்றியம் சார்பில், வேட்டூர் சாலையில் அமைக்கப்பட்ட  தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து திரிகின்றனர். கோடை வெயில் தாக்கத்தில் ஆறு, குளம், ஏரி, குட்டை உள்பட நீர்நிலைகள் வற்றியதுடன், நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இந்நிலையில், மேற்கண்ட கிழ்வசலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில், குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பழுதானது. இதனால், தண்ணீர் வீணாக வெயியேறி, சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள், பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்கேயே தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த தண்ணீர் கழிவுநீர் போல் மாறிவிட்டதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு ெதாற்று நோய் ஏற்படுத்துவதுடன், நிலத்தடி நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, மேற்கண்ட தொட்டியில், பழுதடைந்துள்ள குழாய்களை மாற்றியமைக்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி, மெத்தன போக்குடம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.  மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நேரத்தில், இதுபோல் குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி நிற்பது, அதிகாரிகள் மீது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...