×

பெரும்புதூர் பஸ் நிலைய கடைகள் ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர், கடைக்காரர்களுக்கு இடையே பனிப்போர்


பெரும்புதூர், ஜூன் 21:  பெரும்புதூர் பேருராட்சியின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், எந்த நேரத்திலும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும். இதையொட்டி, கடந்த 2010ம் ஆண்டு பெரும்புதூர் பேரூராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் 33 வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. பின்னர், அந்த கடைகள் ஏலம் விடப்பட்டன. அதனை ஏலம் எடுத்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொண்டனர். இந்த கடைகள், 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மீண்டும் ஏலம் விடவேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது, முதற்கட்டமாக 26 கடைகளுக்கான ஏல அறிவிப்பினை, பெரும்புதூர் பேரூராட்சி அறிவித்துள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் ₹1 லட்ச்துக்கான டிடியை, பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள செயல் அலுவலரிடம் வழங்க வேண்டும். 25ம் தேதி காலை 11 மணியில் இருந்து மாலை வரை ஏலம் நடைபெறும்.

இதற்கிடையில், ஏற்கனவே கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வந்தவர்களுக்கு மீண்டும் கடை வழங்க வேண்டும் என அரசியல்  கட்சியை சேர்ந்த சில கடைக்காரர்கள் கொடி பிடித்துள்ளனர். இதனால், பெரும்புதூர் பேரூராட்சி அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையே பனிப்போர் துவங்கி உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசியல் கட்சி பிரமுகர்கள், வார்டு கவுன்சிலர்கள், ரவுடிகள் என அனைத்து கடைகளையும் ஏலம் எடுத்து கொண்டனர். அப்போது, பொது மக்களிடம், ரவுடிகளை வைத்து மிரட்டியதால், யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், கடைகளை ஏலம் எடுத்த ஒரு சிலரை தவிர, பெரும்பாலானோர் பல லட்சம் ரூபாய்க்கு கடைகளை நடத்த மேல் வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதனால், ஏற்கனவே வருவாய் பார்த்துவிட்டதால், மீண்டும் அந்த கடைகளை தனக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டு வருகின்றனர்.இதற்கு செவி சாய்க்காத செயல் அலுவலரை, பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பெரும்புதூர் பேரூராட்சி அரசியல் பிரமுகர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனால், ஏலம் விடும்போது, பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ரவுடிகள் முகாமிட்டு, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடும். எனவே, பெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஏலம் விடப்படும் நாளன்று போலீஸ் பாதுகாப்பு பெற வேண்டும். அப்போது, அந்த ஏலத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும் என்றனர்.

Tags : Bus Station Auction ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...