×

சூரப்பட்டு நீரேற்று நிலையத்தில் பரபரப்பு காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை

அம்பத்தூர், ஜூன் 21: அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.    
அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, மேட்டூர் பாரதிதாசன் நகர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.  இதனால், குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் தனியார் லாரிகளிடம் ஒரு குடம் தண்ணீரை ₹10க்கு வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது. இதற்கிடையே நீரேற்று நிலையத்தில் இருந்து நள்ளிரவில் தனியார் லாரிகளுக்கு திருட்டுத்தனமாக தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குடியிருப்புவாசிகள் மாதவரம் மண்டல அதிகாரிகள், மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் அளித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில்  குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அறிவித்தனர். இதன்படி நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொழிலாளர்களுடன் இணைந்து ஏஐடியுசி நிர்வாகிகள் துரைசாமி, மாரியப்பன், திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் சூரப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் திரண்டனர்.  பின்னர், அனைவரும் காலி குடங்களுடன் அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக கோஷமிட்டபடி சென்றனர். அதன் பிறகு, அவர்கள் சூரப்பட்டு நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், மண்டல பொறியாளர் பிரதீபா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தித்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, சூரப்பட்டு பகுதிகளுக்கு முறையான குடிநீர் வழங்கவும், வாட்டர் டேங்க் இல்லாத இடத்தில் புதிதாக அமைக்கவும், டேங்குகளை பராமரிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் சூரப்பட்டு நீரேற்று நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக  குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   தகவலறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து  மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : People siege ,hydropower station ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில்...