×

போதுமான இடவசதி இல்லாமல் கொளுத்தும் வெயிலில் மாணவர்களுக்கு கல்வி

புழல், ஜூன் 21: புழல் காவாங்கரையில் ஒரே வளாகத்தில் 2 பள்ளிகள் உள்ளதால் மாணவ,  மாணவியர்கள் அடிப்படை வசதியின்றி வெயிலில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் உள்ளன.  இங்கு மொத்தம் 4 கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. இதில் துவக்கப் பள்ளியில் சுமார் 260 மாணவ, மாணவிகளும், உயர்நிலை பள்ளியில் சுமார் 360 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இடவசதி இல்லாததால் வளாகத்தில் உள்ள தரையிலும், அரங்க மேடையிலும், கொளுத்தும் வெயிலிலும்  அமர்ந்து மாணவ, மாணவிகள் படிக்கும் நிலை உள்ளது.   இதனால் மாணவர்கள் சோர்வடைந்து வருகின்றனர். போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதியும் இல்லை. விளையாடுவதற்கு இடமும்  இல்லை. கட்டிட வசதி இல்லாததால் ஒவ்வொரு கட்டிடத்திலும் இரண்டு வகுப்பறைகள் ஏற்படுத்தி பாடம் நடத்துவதால் ஆசிரியர்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் புதிய கட்டிடமோ அல்லது உயர்நிலை பள்ளிக்கென தனியாக இடமோ ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘கண்ணப்பசாமி நகரில் ஒன்றிய துவக்கப்பள்ளி 1986ம் ஆண்டு துவக்கப்பட்டு, 2004ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 2007ம் ஆண்டு வரை பள்ளியில் அப்போது சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். அப்போதே போதுமான இடமில்லை, விளையாட்டு திடல் இல்லை என புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவித அறிவிப்பையும் ஆய்வும் செய்யாமல் தமிழக அரசு அதிரடியாக 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது.

அன்று முதல் ஒரே வளாகத்தில் இரண்டு பள்ளிகளிலும் அதிகமானவர்கள் படித்து வருகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. எனவே தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து மேல்நிலைப் பள்ளிக்கு இதே பகுதியில் இடம் தேர்வு செய்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்