×

திருவேற்காடு நகராட்சியில் பூங்கா ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பூந்தமல்லி, ஜூன் 21: திருவேற்காடு நகராட்சி பூங்காவை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 23 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை சீரமைக்கவும், குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அமைக்கவும் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை பெருநகர வளரச்சி குழுமம் ₹7.65 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்லவன் நகர் பகுதியில் உள்ள பூங்காவை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த பூங்காவை சுற்றி சில வீடுகளின் மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. மேலும் இப்பூங்காவின் ஒரு பகுதியை அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள்  30 ஆண்டுகளுக்கும் மேலாக வழியாக பயன்படுத்தி வந்தனர். இதற்காக  நகராட்சி நிர்வாகம் அந்த வழியில் சிமெண்ட் சாலையும் அமைத்து கொடுத்திருந்தது.

இதற்கிடையே பூங்காவை ₹46 லட்சம் செலவில் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் சித்ரா மேற்பார்வையில் நேற்று 2 பொக்லைன் உதவியுடன் 3 வீடுகளின் மதில் சுவர் உள்பட பல்வேறு ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர்  எதிர்ப்பு தெரிவித்து நகாரட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அவர்களுடன் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பூங்காவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை தொடர்ந்து அதனை சுற்றி மதில் சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நகரமைப்பு அதிகாரி கவிதா, ஓவர்சீஸ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : municipality ,Thiruvenkadu ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை