×

ஆவாஜிபேட்டையில் கிராம பெயர் பலகை அகற்றம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம்  அருகே ஆவாஜிபேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் இந்த சாலையின் ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆவாஜி பேட்டை என எழுதப்பட்ட பெயர் பலகையை கடந்த வாரம் நிறுவினர். இந்த பெயர் பலகையை  நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம் வனத்துறையினர் சேதப்படுத்தி அகற்றிவிட்டனர். இதையறிந்த ஆவாஜிபேட்டை கிராமத்தை  சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள்  பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 19ம்  தேதி மாலை 4.30 மணியளவில் வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலை துறையினரால் வைக்கப்பட்ட ‘‘ஆவாஜிபேட்டை’’ என எழுதப்பட்டிருந்த எங்கள் கிராமத்தின் பெயர் பலகையை வனத்துறை அலுவலர்கள் பொக்லைன் மூலம் சேதப்படுத்தி தள்ளி  விட்டனர். இதனால் எங்கள் கிராமத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பெயர் பலகையை அகற்றியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...