×

பேச்சிப்பாறை அணை மூடல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு 28 நாட்கள் ஆகியும் குடிநீர் கிடைக்காமல் அவதி

நாகர்கோவில், ஜூன் 19:  நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு முக்கடல் அணை குடிநீர் ஆதாரமாக உள்ளது. முக்கடல் அணை மொத்தம் 163 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முக்கடல் அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மாநகராட்சியின் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவை அதிகரிப்பால் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நாட்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டு செல்கிறது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும்.  இதனால் ஒரு நாளைக்கு 40 எம்எல்டி தண்ணீர், அதாவது 400 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. வெயிலின் தாக்கம் மற்றும் வறட்சி காரணமாக முக்கடல் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் பெற்று, முக்கடல் அணைக்கு அந்த தண்ணீரை கொண்டு வந்து, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

 முக்கடல் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், பேச்சிப்பாறை அணை தண்ணீரை நம்பி இருப்பதாலும், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாட்களின் இடைவெளி 15 முதல் 20 நாட்கள் வரை ஆனது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதை தொடர்ந்து விவசாயத்திற்கு தண்ணீரை தேக்கிவைக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் அடைக்கப்பட்டது. இதனால் முக்கடல் அணைக்கு தண்ணீர் வரவில்லை. மழை தண்ணீர் மட்டும் வந்துகொண்டு இருந்தது. கடந்த சில நாட்கள் பெய்த மழையால் முக்கடல் அணையில் ஒன்றே முக்கால் அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் பெருகியது. தற்போது அணையில் மைனல் 18 அடி தண்ணீர் உள்ளது.  முக்கடல் அணையில் இருந்து 800 மி.மீட்டர், 600 மி.மீட்டர், 400 மி.மீட்டர் விட்டம் கொண்ட 3 குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும். தற்போது முக்கடலில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் 600 மி.மீட்டர் விட்டம் கொண்ட குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.   

முக்கடல் அணையில் இருந்து தற்போது 8 எம்எல்டி தண்ணீர் (80 லட்சம் லிட்டர்) எடுக்க முடிகிறது. இதனை வைத்து நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. 15  முதல் 20 நாட்கள் வரை ஆன குடிநீர் விநியோகம் தற்போது சில பகுதிகளுக்கு 28 நாட்கள் வரை நீடிக்கிறது. மேலும் குடிநீர் சீராக வழங்க முடியாத நிலைக்கு மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்துள்ளனர்.  கேன் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரேவை சந்தித்து பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேச்சிப்பாறை அணையில் இருந்து வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் நாட்கள் நீடித்துள்ளது. போதிய அளவு தண்ணீர் முக்கடல் அணையில் இருந்து எடுக்க முடியாத நிலை இருந்து வருவதால், ஒரு நாளைக்கு ஒவ்வொரு பகுதி வாரியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை நீடித்தால், தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். பருவமழை பெய்தால் மட்டுமே குடிநீர் சீராக விநியோகம் செய்ய முடியும் என்றார்.

குழாய் தண்ணீருக்கு மவுசு
முக்கடல் அணையில் இருந்து வரும் தண்ணீரை கிருஷ்ணன்கோவில் சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வெளியே உள்ள பொதுகுழாயில் இருந்து குடிநீரை பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குடம், கேன் மற்றும் பாட்டில்களில் பிடித்துச்செல்கின்றனர்.

Tags : area ,Nagercoil Municipal ,
× RELATED கரூர் பகுதியில் சூறாவளி காற்று மின்தடையால் மக்கள் அவதி