×

தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் 4 திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 19: விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 4 திமுக எம்.எல்.ஏக்கள் விருதுநகரில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாதமாக குடிநீர் மற்றும் மற்ற உபயோகத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. நகரங்கள், ஊராட்சிகளில் 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், மக்கள் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலத்திலும் வந்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் சாத்தூர் ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்) ஆகியோர் நேற்று விருதுநகரில் கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து, தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சாத்தூர் ராமச்சந்திரன்: ‘மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் குடங்களுடன் தெருக்களில் அலைகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வைகையில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. தாமிரபரணியில் வரவேண்டிய 40 லட்சம் லிட்டருக்கு தற்போது 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் வருகிறது. தினசரி 80 லட்சம் லிட்டர் தேவைப்படும் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 20 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைப்பதால் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வழங்க முடியவில்லை. லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், கிராமங்களுக்கான தாமிரபரணி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
தங்கம் தென்னரசு: காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, மல்லாங்கிணர் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவில்லை. பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. 2010ல் கொண்டு வரப்பட்ட திட்டத்தை முழுமையாக முறைப்படி செய்திருந்தால், தட்டுப்பாடு வந்திருக்காது. குடிநீர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளோம்’ என்றார்.

ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்: விருதுநகர் நகராட்சி மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி மற்றும் கிராமங்களுக்கு மாதம் ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. விருதுநகர் ஊராட்சிப் பகுதி கிராமங்களுக்கான  தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. திட்டத்தில் குழாய்கள் 1.5 மீ ஆழத்தில் பதிக்க வேண்டிய குழாய்கள் ஒரு அடி ஆழத்தில் பதித்து, ஊழல் நடந்துள்ளது. நீராதாரமாக உள்ள ஆனைக்குட்டம் அணை ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் இருக்கிற தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.  தங்கப்பாண்டியன்: ராஜபாளையம் நகராட்சிக்கான தண்ணீர் இருப்பு 2 அடியாக உள்ளது. அதன்மூலம் ஒருவாரத்திற்கு சமாளிக்க முடியும். கிராமங்களில் உள்ளாட்சி அமைப்பு இல்லாததால், தண்ணீர் தட்டுபாடு நிலவுகிறது. உள்ளாட்சிகளில் மோட்டார் இல்லாததால் பல போர்வெல்களில் இருந்து தண்ணீரை எடுக்க முடியவில்லை’ என்றார்.

Tags : DMK ,Collector ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...