×

சிவகாசி 7வது வார்டில்வாகன ஓட்டிகள், பள்ளி மாணவிகள் கடும் அவதி

சிவகாசி, ஜூலை 19: சிவகாசி 7வது வார்டில் உள்ள ஞானகிரி ரோடு கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால், அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  சிவகாசி நகராட்சியில் உள்ள 7வது வார்டில் கருப்பணன் தெரு, வள்ளலார் தெரு, காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, ஞானகிரி ரோடு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஞானகிரி ரோடு கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோட்டில் உள்ள வாறுகால்கள் சேதமடைந்துள்ளன. இதனால், மழை காலங்களில் கழிவுநீர், சாலைகளில் குளம்போல தேங்குகிறது. இப்பகுதியில் பெண்கள் பள்ளி உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவிகள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர். சாலையில் கழிவுநீர் குளம்போல தேங்குவதால் மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. இதேபோல, 50 வீட்டு காலனிப் பகுதியில் வாறுகால் முறையாக தூர்வாரப்படுவதில்லை. வாறுகாலில் புழுக்கள் ஊர்கின்றன. இதனால், பொதுமக்கள் பகலிலேயே வீடுகளை பூட்டும் நிலை உள்ளது. குப்பைத் தொட்டி இல்லாததால், குப்பைகளை சாலையில் வீசுகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குடிநீரும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அவதிப்படுகின்றனர். நேசனல் காலனி, காரனேசன் காலனி பகுதி கழிவு நீர் திருத்தங்கல் ரோட்டில் உள்ள வாறுகால் வழியாகச் சென்று கிருதுமால் ஓடையில் கலக்கிறது. 4 ஆணடுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வாறுகால் தூர்வாரப்படாமல் மண்மேவிக் கிடக்கிறது. மழை காலங்களில் வாறுகால் நிரம்பி சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. எனவே, வாறுகாலை தூர்வாரவும், ஞானகிரி ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Drivers ,schoolchildren ,ward ,Sivakasi ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...