×

அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டை, ஜூன் 19: அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு 3வது நாளாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு, வைகை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. வைகை வறண்டு கிடப்பதால், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வழங்கப்படுகிறது. நகருக்கு தினமும் 49.50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில், வறட்சி காரணமாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் மின்தடை, பைப் லைன் பழுது உள்ளிட்ட பால காரணங்களால் மாதம் ஒரு முறை மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நகராட்சிக்குட்பட 9வது வார்டு உச்சிசாமி கோயில் தெருவில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை காலி குடங்களுடன் திரண்டு அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் வாழவந்தம்மன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், உதவி பொறியாளர் காளீஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் தொடர் மறியல்: அருப்புக்கோட்டையில் குடிநீர் விநியோகம் கோரி தொடர் மறியல் நடந்து வருகிறது. 8வது மற்றும் 11வது வார்டுகளை சேர்ந்த மக்கள் குடிநீர் கோரி, கடந்த ஞாயிறன்று அருப்புக்கோட்டை-ராமேஸ்வரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகர் பகுதி மக்கள், குடிநீர் வழங்கக் கோரி, அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 3வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Women ,Aruppukkottai road ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது