×

தொடர்கதையாகும் வாகன விபத்துகள் கண்டுகொள்ளுமா போக்குவரத்து காவல்துறை?

காரைக்குடி, ஜூன் 19:  காரைக்குடி பகுதியில் டூவீலர்கள் மற்றும் கார்களில் பறக்கும் சிறுவர்களால் தினமும் வாகன விபத்து  தொடர்கதையாகி வருகிறது. காரைக்குடி பகுதியில் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரிகள்  உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.  நகரபகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நகர வளர்ச்சிக்கு ஏற்ப  வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.  வாகனம் ஓட்ட லைசென்ஸ் பெற தகுதியில்லாத  18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளே அதிக அளவில் டூவீலர்கள் முதல் கார்கள் ஓட்டுகின்றனர். பல மாணவர்கள் டூவீலர்களில் தான் பள்ளிக்கு வருகின்றனர். இதனை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்வது கிடையாது. பெற்றோர்களும் தடுப்பது கிடையாது.  அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் சிலரிடம் லைசென்ஸ் என்பது இல்லை.  முறையாக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி இல்லாதால் தினமும் 20க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. முறையாக லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். தடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

எனவே வாகனம் ஓட்டும் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சமூகஆர்வலர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்கள் டூவீலர் முதல் கார் ஓட்டுவது  அதிகரித்துள்ளது.  தங்களது குழந்தைகள்  வாகனத்தில் செல்வதை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர். வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் மீண்டும் ஓட்ட மாட்டார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், 18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போது தான் பெற்றோர்களும் வாகனங்களை தரமாட்டார்கள். வாகனங்களில் பொதுவாக மாணவ, மாணவிகள் ஒருவரை மட்டும் ஏற்றிச்செல்வது இல்லை. பள்ளி  முடிந்தவுடன் 3 பேர்தான் செல்கின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Traffic Police ,Vehicle Accidents ,
× RELATED சென்னை வரும் பிரதமர் மோடி;...