மக்களுக்காக குரல் தரும் ஒரே இயக்கம் திமுக தான் பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு

காரைக்குடி, ஜூன் 19:  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  மக்களுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் குரல் கொடுக்க கூடிய ஒரே  இயக்கம் திமுக என, பெரியகருப்பன் எம்எல்ஏ பேசினார். காரைக்குடி நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகரச்செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு பல சாதனை திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, ஏழை, எளிய விளம்பு நிலை மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சியை கொண்டு வந்தவர். தலைவர் கலைஞர் ஊட்டிய தன்மான உணர்வு, அவர் ஏற்றி வைத்த சுயமரியாதை சுடர், இந்திய அரசியல் அரங்கில் தமிழுக்கும், தமிழகத்துக்கும் அவர் சேர்த்த அழியா பெருமை எல்லாம் இன்றும் தமிழர்கள் மத்தியில் சிறப்புமிக்க அத்தியாயமாக விளங்குகிறது. அவரது வழியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்திவருகிறார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் குரல் கொடுக்க கூடிய ஒரே இயக்கமாக திமுக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், தலைமைக்கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, முன்னாள் இளைஞர்அணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Periyakuruppan MLA ,
× RELATED தீபாவளி பண்டிகைக்காக சென்னையில்...