சுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மை கலெக்டர் வினய் அறிவுறுத்தல்

திண்டுக்கல், ஜூன் 19: சுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மையை கையாள வேண்டும் என கலெக்டர் வினய் தெரிவித்தார். திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் ஆறு கழிவு மேலாண்மை விதிகள் குறித்த திறன் மேம்பாட்டு திட்டம் பற்றிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் 20 நகரங்களில் ஆறு வகை கழிவு பொருட்களான அபாயகரமான கழிவுகள், திடக்கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட கழிவுகள் அகற்றுவதற்கு கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடினர்.தொடர்ந்து கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், ‘இத்திட்டத்தை நடத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள 20 வெவ்வேறு நகரங்களில் திண்டுக்கல்லை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு நாளில் முடிந்து விடும் பணி அல்ல. நமது அன்றாட நிகழ்வாக தினந்தோறும் சுழற்சி முறையில் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்வது.

Advertising
Advertising

ஏதேனும் ஒரு இடத்தில் தொய்வு ஏற்பட்டாலும் திடக்கழிவு பணிகளில் தடை ஏற்படும். தற்போது வீடுகள். உணவு விடுதிகள், சந்தைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகளை சேகரித்து கிடங்குகளில் கொட்டி வருகிறோம். இதில் அபாயகரமான குப்பைகளான மருத்து கழிவுகள், கட்டிட கழிவுகள் கலந்து விடுகின்றன. இதை பிரித்தெடுப்பதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே அலுவலர்கள் இவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு உரிய இடங்களை தேர்வு செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிட நிலை வேகமாக மாறி வருகிறது. அதேபோல் குப்பைகளை பிரித்து வழங்கும் விழிப்புணர்வை பொதுமக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளில் சேருவதை தடுக்க முடியும். சுற்றுச்சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது அவசியம்.

இதனை நல்ல முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பை அளிக்க முன் வருவார்கள். எனவே அலுவலர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்த தங்களது சந்தேகங்களை இந்த கருத்தரங்கில் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் சிறந்த பங்களிப்பை அளித்து திண்டுக்கல் மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார்.

இதில் துணை இயக்குனர் ராஜூ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், உதவி இயக்குனர் (ஊ) கருப்பையா, நகர்நல அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக கருத்தரங்கம் நடக்கிறது.

Related Stories: