கொடைக்கானலில் திறந்தவெளி பாராகும் கோழி விரிவாக்க நிலையம்

கொடைக்கானல், ஜூன் 19: கொடைக்கானலில் திறந்தவெளி பாராக மாறி வரும் கோழி விரிவாக்க நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் கோழி விரிவாக்க நிலையம் உள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் இந்நிலையத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக குறைந்த விலையில் கோழி மற்றும் அதன் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக இந்த கோழி விரிவாக்க நிலையம் பயன்பாடின்றி உள்ளது. இதனால் தற்போது இந்நிலையம் மதுப்பிரியர்களின் கூடாரமாகவும், முட்புதர்கள் வளர்ந்து விஷஜந்துகளின் புகலிடமாகவும் மாறி உள்ளது. தவிர திறந்தவெளி கழிப்பறையாக மாறி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்புத்துறை கோழி விரிவாக்க நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளூர்காரர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கமீடம் கேட்டபோது கூறியதாவது, ‘கல்லறை மேடு பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கோழி விரிவாக்க மையத்தில் பசுக்களுக்கான சினை ஊசி போடும் மையமும் செயல்பட்டு வந்தது. தற்போது சினை ஊசி போடுவது இல்லாததால் இம்மையம் தற்போது இயங்கவில்லை. கோழி விரிவாக்க மையம் மட்டும் அவ்வப்போது செயல்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: