திண்டுக்கல் ஆசிரியையிடம் நகை பறிப்பு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திண்டுக்கல், ஜூன் 19: திண்டுக்கல்லில் ஆசிரியையிடம் நகை பறித்த மதுரையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் கோபால்நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (50). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டருகே வாக்கிங் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே டூவீலரில் முகத்தை துணியால் மூடியபடி வந்த 2 மர்மநபர்கள் திடீரென மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். மகாலட்சுமி கூச்சலிடவே பொதுமக்கள் இருவரையும் விரட்ட துவங்கினர். வேகமாக ஓட்டியதால் செயின் அவிழவே டூவீலரை கீழே போட்டு விட்டு இருவரும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் இருவரையும் விரட்டி பிடித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை காஜிமாநகரை சேர்ந்த முகமது செரீப் (20), வில்லாபுரம் ஹவுசிங்போர்டை சேர்ந்த சையது சேக் அப்துல்லா (22) என்பது தெரிந்தது. மேலும் இருவரும் திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். செயின் பறிப்பு திருடர்களை பொதுமக்களே விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : teacher ,Madurai ,Dindigul ,
× RELATED திநகர் டியூசன் சென்டரில் பதறவைக்கும்...