ஒட்டன்சத்திரத்தில் ஒரு சாலை பணியையும் முடிக்கல... பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை

ஒட்டன்சத்திரம், ஜூன் 19: ஒட்டன்சத்திரத்தில் சாலை பணிகள் அனைத்தும் ஜல்லி கற்கள் கொட்டிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டுக்குட்பட்ட திடீர்நகர், வள்ளுவர்நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காந்திநகரில் இருந்து இப்பகுதிக்கு செல்வதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.  முதற்கட்டமாக ஜல்லிக்கற்களை சாலையில் பரவ விட்டனர். அதன்பின் இதுவரை எந்த பணிகளுமே நடக்கவில்லை. இதனால் இப்பகுதி வழியே வாகனஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத அவலநிலை உள்ளது.இதேபோல் ஒட்டன்சத்திரம் 11வது வார்டு தும்மிச்சம்பட்டியில் இருந்து கஸ்தூரிநகரை இணைக்கும் இணைப்பு சாலையும் பெரயர்த்த நிலையிலே கடந்த 6 மாதங்களாக கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதேநிலை தான் உள்ளது. எனவே ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் உடனே கிடப்பில் போட்டுள்ள சாலை பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கல்வித்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு பெற்றோர் சாலைமறியல்