காற்று காலத்தில் காத்து கொள்வது எப்படி?

பழநி, ஜூன் 19: காற்று காலத்தில் நம்மை காத்துக்கொள்ளும் வழிமுறை குறித்து மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். கோடையின் கொடுமையின் இறுதி கட்டத்தில் உள்ள நாம் இப்போது அம்மியும் அசைக்க கூடிய ஆடிக் காற்று காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம். இதையடுத்து பருவகால சீதோஷண நிலை மாற்றத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பல்வேறு நோய்களால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதிலிருந்து தப்பிப்பது குறித்து பழநியை சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர். ஷாலினி விமல்குமார் கூறியதாவது, ‘பெரும்பாலான நோய் தொற்று மற்றும் நோய்கிருமிகள் பரவுவது காற்றின் மூலமாகத்தான். தற்போதுள்ள காற்றடி காலத்தில் அதிக காற்றின் காரணமாக இடமாறும் தூசு, குப்பை போன்றவற்றால் நோய் கிருமிகள் விரைவில் வர வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக அலர்ஜி, ஆஸ்துமா, சளித்தொல்லை போன்றவையும், காற்றில் பரவும் தூசி மற்றும் கிருமிகளின் காரணமாக கண்நோய் (கண்வலி), காதுவலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலர்ஜியின் காரணமாக ஏற்படக்கூடிய நுரையீரல் நோய்கள் அதிகமாகும்.

இந்த காற்று வறண்ட காற்றாக இருப்பதால் தோலின் ஈரப்பதம் குறைந்து வறட்சியும், தோலில் வெடிப்பும் அதன் காரணமாக அரிப்பு மற்றும் சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. வாத நோய்கள் அதிகமாவதும் காற்றடி காலத்தில்தான் என்று சித்த மருததுவம் கூறுகிறது. மூக்கில் நீர்வடிதல், தலைபாரம், மூக்கடைப்பு, உடல்வலி, இதனுடன் கூடிய காய்ச்சல் அதிகம் ஏற்படுவதும் இக்காலத்தில்தான். இது குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவரையும் தொற்றி பரவ வாய்ப்பிருக்கிறது. காற்று காலத்தின் தாக்கத்தை தவிர்க்க தேவையற்ற வெளி வேலைகளையும், அதிகமான அலைச்சல்களையும் தவிர்க்கலாம். காற்று காலங்களில் வீடுகளில் சேரும் தூசு, குப்பை போன்றவற்றை அப்புறப்படுத்துவது அவசியம். இக்காலங்களில் சருமம் உலர்ந்து காணப்படும். அவரவரின் தோலின் தன்மைக்கேற்ப தேங்காய் எண்ணை அல்லது லோஷன் போன்றவற்றை தடவி கொள்ளலாம்.

தூசியோ அல்லது உறுத்தும் துகளோ கண்ணில் விழுந்து விட்டால் கண்ணை தேய்க்காமல் நீரால் கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது கண்களை பாதுகாக்க அவரவருக்கு பொருத்தமான கண்ணாடிகளை அணிய வேண்டும். காற்றடி காலத்தில் காது நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, பயணத்தின்போது காதில் பஞ்சை வைத்து கொள்ளலாம். தினமும் ஒருமுறையேனும் குளிக்க வேண்டும். தலைமுடி வறட்சி அடையா வண்ணம் தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளலாம். சத்துள்ள, எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை உண்ண வேண்டும். பருத்தி, கதர் உடைகளை அணிவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சென்னையில் 8வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு