கலெக்டருக்கு கடிதம் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மைனர் பெண்

இடைப்பாடி, ஜூன் 19:  இடைப்பாடி அருகே, திருமணத்தில் விருப்பம் இல்லாத மைனர் பெண் கலெக்டர், எஸ்பி மற்றும் போலீசாருக்கு கடிதம் எழுதி தனக்கு நாளை நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி வேட்டுவப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் கார்த்திகா (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், இவர் நங்கவள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். கார்த்திகாவுக்கு இன்னும் 18 வயது முழுமையடையவில்லை. நான்கு நாட்கள் உள்ளது. இந்நிலையில் அவரது பெற்றோர் கார்த்திகாவுக்கு வேட்டுவப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் மகன் விஜயகுமார் (23) என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயம் செய்து நாளை (20ம்தேதி) எல்லமடை கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் கார்த்திகா, எனக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கினறனர். இதை தடுத்து நிறுத்தவேண்டும். மீறி திருமணம் செய்து வைத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என சேலம் கலெக்டர், எஸ்பி, சங்ககிரி மகளிர் காவல் நிலையம் மற்றும் பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தபால் மூலம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் விஏஓ மாரிமுத்து மற்றும் பூலாம்பட்டி போலீசார், வீட்டிற்கு நேரில் சென்று கார்த்திகா மற்றும் அவரது பெற்றோரிடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகா, 18 வயது பூர்த்தியடைந்தாலும், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து  கார்த்திகாவை மீட்ட அதிகாரிகள், சேலம் குழந்தைகள் நல குழும காப்பகத்தில் ஒப்படைத்தனர். நான்கு நாட்களுக்கு பின் அவருக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின், இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: