சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மானியம்

சேலம், ஜூன் 19: சேலம் மாவட்டத்தில், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம், மழை தூவான் கருவிகள் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும மழை தூவான் கருவிகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படும். நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூன்று வருட காலத்திற்குள் ஏற்படும் தயாரிப்பு குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை கட்டணமின்றி சீரமைக்க வேண்டும். தவறும் நிறுவனங்களை விவசாயிகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  நுண்ணீர் பாசனத்தை குறித்த சந்தேகங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த தகவல்களை பெற 1800-425-4444 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: