×

கெங்கவல்லி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சரண்

கெங்கவல்லி, ஜூன் 19: கெங்கவல்லி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த  பெண் ஒருவர் நேற்று கெங்கவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூரை சேர்ந்த விவசாயி  கந்தசாமி (70). இவரது பக்கத்து காட்டை சேர்ந்த விவசாயி மாரப்பன்(65). இவர்கள் இருவரும் தங்கள் நிலத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதில் 1.70 ஏக்கர் நிலத்தை கந்தசாமியும், 4.70 ஏக்கர் நிலத்தை மாரப்பனும் வைத்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் மாரப்பன் வைத்துள்ள நிலத்தை, தனக்கு சரிசமமாக பிரித்துக் கொடுங்கள் என அதில் கேட்டிருந்தார்.  மனுவை விசாரித்த நீதிமன்றம் தாங்கள் கோரியுள்ளது அரசு புறம்போக்கு நிலம். எனவே இரண்டு பேரும் இடத்தை காலி செய்யுங்கள் என உத்தரவிட்டது.


இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, கெங்கவல்லி வருவாய் அலுவலர்கள், கந்தசாமி மற்றும் மாரப்பன் ஆக்கிரமித்து இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டனர். இதனால் 4.70 ஏக்கர் நிலத்தை இழந்த மாரப்பன் கந்தசாமியை பழிதீர்க்கும் எண்ணத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த  கந்தசாமியை, மாரப்பன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து கந்தசாமி மகன் பரந்தாமன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கெங்கவல்லி போலீசார், மாரப்பன் அவரது மனைவி சரோஜா மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆத்தூர் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரப்பன் நாமக்கல் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  நீதிபதி விஜயன், அவரை வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தேடப்பட்ட மாரப்பன் மனைவி சரோஜா(64) நேற்று கெங்கவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Saran ,murder ,Kangavalli ,
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்