பள்ளிபாளையத்தில் கழிவு நீரை வெளியேற்றிய 2 சாயப்பட்டறை மூடல்

பள்ளிபாளையம், ஜூன் 19: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஞாயிற்றுகிழமை, அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து, குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடையில் இரவு நேரங்களில் சாயக்கழிவுநீரை சாயப்பட்டறை உரிமையாளர்கள் வெளியேற்றி வருகின்றனர். ரசாயனங்களின் நெடியால் வீடுகளில் இருக்கவே முடியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் புகார் குறித்த நடவடிக்கை எடுக்கும்படி, குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுசூழல் பொறியாளர் ஜெயலட்சுமிக்கு அமைச்சர் உத்தரவிட்டார். கடந்த வாரம்தான் இந்த பகுதியில் உள்ள 13 உரிமம் பெற்ற சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள் இவற்றை உடனடியாக மூடும்படி உத்தரவிட்டனர். இதன் படி ஆவத்திபாளையம், களியனூர் ஆகிய இடங்களில் இயங்கி வந்த 2 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் நேற்று துண்டித்தனர். மேலும், உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு பரிந்துரை செய்தனர். கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தலைமை பொறியாளர் ஜெயலட்சுமி எச்சரிக்கை விடுத்தார்.

× RELATED கழிவுநீரால் மாசடையும் வீரகேரளம்புதூர் கால்வாய்