மணல் லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டதால் மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார் மீது கிராம உதவியாளர்கள் புகார்

திருவெறும்பூர், ஜூன் 20: திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம உதவியாளர்களை தன்னிச்சையாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பணி மாற்றம் செய்த தாசில்தாரின் செயலை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் புதிய தாசில்தாரிடம் முறையிட்டதோடு கலெக்டரை சந்திக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவெறும்பூர் தாசில்தாராக பணிபுரிந்த அண்ணாதுரை மணல் லாரி உரிமையாளர்களிடம் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்துக்கொள்வதற்கு பேரம் பேசிய செல்போன் உரையாடல் சமூகவலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி கலெக்டர் சிவராசு அதிரடியாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை 15ம்தேதி மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மருங்காபுரி தாசில்தார் தாசில்தார் ரபீக் அகமது என்பவரை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் திருவெறும் தாசில்தாராக இருந்த அண்ணாதுரை 13ம் தேதியே கிராம நிர்வாக உதவியாளர்களை பணியிட மாற்றம் செய்ததாக 16ம் தேதி ஆணை வெளியிட்டுள்ளார். அதன்படி கிளியூர் கிராம உதவியாளராக வேலை செய்த பெருமாள் நவல்பட்டிற்கும், சூரியூர் வடிவேல் குண்டூருக்கும், குண்டூர் விசுவநாதன் அசூர் கிராமத்திற்கும், அசூர் டேவிட் ராஜா பழங்கனாங்குடிக்கும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு கோப்பிலும் தாசில்தார் கையெழுத்து இடுவதற்கு முன்பு அதனை டைப் செய்தவர் கையெழுத்திட வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட கிளார்க் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு டெப்டி தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அதன் பிறகு தான் தாசில்தார் அந்த கோப்பில் கையெழுத்து இடுவது வழக்கம். ஆனால் கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிட மாறுதல் ஆணையில் தாசில்தார் அண்ணாதுரை சம்மந்தப்பட்ட கிளார்க், டெப்டி தாசில்தார் ஆகியோர் கையெழுத்திடாத நிலையில் தான் மட்டும் கையெழுத்திட்டுள்ளதை பார்த்தால் இந்த ஆணை 16ம்தேதி தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களும், உதவியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து நேற்று புதிதாக பதவியேற்ற திருவெறும்பூர் தாசில்தார் ரபிக் அகமதுவிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் முறையிட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக திருச்சி கலெக்டர் சிவராசுவை நேரில் சந்தித்து புகார் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதனால் அண்ணாதுரை மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: