திருவெறும்பூரில் பரபரப்பு 100 நாள் பெண் தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

திருவெறும்பூர், ஜூன் 19: திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் முன் நேற்று 100 நாள் வேலை பெண் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் 50 முதல் 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும், பணி தல ெபாறுப்பாளர்களுக்கு மட்டும் 200 முதல் 250 நாட்கள் வேலை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உள்ளூரிலேயே பணி இருக்கும்போது 7 கி.மீ. தொலைவில் கடும் வெயிலில் பணி வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே ஊராட்சி செயலாளர் சூசைராஜை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பெண்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சோழமாதேவி பகுதி பெண்கள் நேற்று காலை திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், கடும் வெயிலில் வேலை பார்த்த சகுந்தலா என்பவர் மயங்கி விழுந்துவிட்டார். அவரை சக தொழிலாளர்களான நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அன்றைய தினம் எங்களுக்கு விடுமுறை போட்டு விட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் எப்படி கலெக்டரிடம் புகார் அளிக்கலாம் என்று மிரட்டுகிறார். ஊராட்சி செயலாளர் சூசைராஜ் தரக்குறைவாக திட்டுகிறார் என்றனர்.இந்நிலையில் பேராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 10 நாட்களில் சூசைராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பெண் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: