கொட்டையூர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் மறியல் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 19: பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கொட்டையூரை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் நகராட்சி 2வது வார்டு கொட்டையூர் தோப்புத்தெருவில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீரும் மற்ற உபயோகத்துக்கு தண்ணீர் பிடித்து பொதுமக்கள் வந்து பயன்படுத்தி வந்தனர்.  இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் குடிநீர் வழங்கவில்லை. இதை கண்டித்து நேற்று மாலை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை தாசில்தார் செல்வம் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து டேங்கர் லாரி மூலம் உடனடியாக தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Citizens Picket Strike Without Water Delivery ,Kottaiyur ,
× RELATED தலைமையாசிரியரை தாக்கிய வாலிபர்களை...