×

21முதல் 23ம்தேதி வரை நாகை புதிய கடற்கரையில் நெய்தல் விழா கொண்டாட்டம்

நாகை, ஜூன் 19: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை புதிய கடற்கரையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நெய்தல் விழா நடைபெறும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நாகையில் பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு சுற்றுலா தலம் எதுவும் இல்லை. நாகை புதிய கடற்கரையை மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக மக்கள் கருதுகின்றனர். இந்த இடத்தில் ஆண்டுதோறும் மே மாதம் பள்ளி விடுமுறை நாட்களில் 3 நாட்கள் நெய்தல் விழா என்ற தலைப்பில் கோடைவிழா நடத்தப்படும். இதில் அரசு துறை சார்பில் ஒவ்வொரு துறையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தும். இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால் இந்த கோடை விடுமுறையை நடத்த முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்த பின் நீண்டு நாட்கள் ஆகியும் கோடைவிழா நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டு கோடை விழா நடத்த வேண்டும் என்று நாகை மக்கள் எதிர்பார்ப்பதாக தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டு கோடை விழா நடத்த கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நாகை புதிய கடற்கரையில் வரும் 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நெய்தல் விழா என்ற தலைப்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதில் கலைமாமணி பத்மாசுப்பிரமணியன் வழங்கும் பரதநாட்டியம், நாகை செல்வம் சூப்பர் சிங்கர் ஆர்க்கெஸ்ட்ரா, செந்தில் ராஜலட்சுமி வழங்கும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, ஜேபி வழங்கும் பொன்மாலைப்பொழுது மெல்லிசை நிகழ்ச்சி, மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் தினந்தோறும் மாலை 4 மணி முதல் விளையாட்டு போட்டிகள், வாணவேடிக்கை, மணல் சிற்பம், மலர்கண்காட்சி, டெலஸ்கோப் வாயிலாக கோள்களை காணும் நட்சத்திர ஜன்னல், அறிவியல் விளையாட்டுகள், பொம்மலாட்டம், உணவு அரங்கம், மீன் கண்காட்சி, நாய் கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கோடை விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : celebration ,coast ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்