×

மணலை பதுக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கருர், ஜூன் 19: சட்ட விரோதமாக மணலை பதுக்கி வைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி கிராம மக்கள் சார்பில் மணியன், விஜயன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக காவிரியாற்றில் பல இடங்களில் மணல் கொள்ளை இரவும் பகலும் நடக்கிறது. இதனால் பல இடங்களில் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்தில் சென்றுள்ளது. ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதன் விளைவாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் வருகின்றனர்.தற்போது அறிவிக்கப்பட்ட ஆய்வின்படி 16 மாவட்டங்களில் சராசரியாக 15 மீட்டர் கீழ் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த மணல் கொள்ளை சம்பந்தமாக மனு அளித்து தெரியப்படுத்தினோம். அடுத்து ஐகோர்ட்டு 4 வாரத்திற்குள் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீதும், மாட்டு வண்டிகளிலும் இதர வாகனங்களிலும் மணல் கடத்துபவர்கள் மீதும், உடந்தையான அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து மணல் காவிரியாற்றில் அள்ளுவதால் கன்னியாகுமரி- காஷ்மீர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தூண்கள் 17 அடி வரை பள்ளமாகி விட்டது. நொய்யல் ஆற்று சாயக்கழிவுநீர் கலப்பதால் காவிரி நீர் நச்சுநீராக மாறி வருகிறது. சட்டவிரோத மணல் இருப்பு (ஸ்டாக் பாய்ண்ட்) வைத்திருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டவிரோதமாக அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். நொய்யலில் இருந்து நெரூர் வரை உள்ள கிராமங்களில் இருக்கும் மாட்டு வண்டிகளை ஆய்வு செய்து கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Collector ,office ,Thunderstorm ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...