×

கழிப்பறை இல்லாத விஏஓ அலுவலகங்கள்

திருவள்ளூர், ஜூன் 19: திருவள்ளூர் மாவட்டத்தில் விஏஓ அலுவலகங்களில் கழிப்பறை இல்லாததால் அங்கு பணியாற்றும் பெண் அலுவலர்கள் திறந்தவெளி மறைவிடத்தை தேடி செல்லும்  அவல நிலை உள்ளது. இருக்கும் கழிப்பறைகளில்  தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விஏஓ அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணியாற்றுபவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் பெண் அலுவலர்கள்.  அலுவலகங்கள் பல இடங்களில் பழைய கட்டிடமாக உள்ளது. ஒரு சில இடங்களில்  ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்குகிறது.இவற்றில் 400க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் கழிப்பறை வசதி இல்லை. ஒரு சில புதிய கட்டடங்களில் மட்டும் கழிப்பறை கட்டப்பட்டிருந்தாலும், அங்கும் முறையான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கிராம நிர்வாக  அலுவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்படுகின்றனர்.

அதிலும் பெண் அலுவலர்களின் பாடு சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. கிராமங்களில் பணியாற்றுபவர்கள் அங்குள்ள வீடுகளில் கழிப்பறையை இரவல் கேட்டு பயன்படுத்தும் நிலை உள்ளது. சில நேரங்களில் திறந்தவெளியை  கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.கழிப்பறை பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாதவர்களின் புள்ளிவிபரத்தை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் எங்களுக்கு, எங்களது நிலை குறித்து அரசுக்கு தகவல் அளிப்பது யாரோ என்று புலம்புகிறார்கள்.
இனியாவது விஏஓ அலுவலகங்களில் கழிவறை வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஏஓக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : VA offices ,
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்