×

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

திருவொற்றியூர், ஜூன் 19: திருவொற்றியூர் 7வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இதனால், வாகன  ஓட்டிகள் சாலை பள்ளங்களில் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி காயமடைகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நூற்றுக்கும்  மேற்பட்டோர் நேற்று காலை பெரியார் நகர் சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் வேலுச்சாமி மற்றும் மணலி போலீசார்  கண்ணகி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்போது பொதுமக்கள் “நாங்கள் பல நாட்களாக சாலை  அமைக்க கோரிக்கை வைத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று செயற்பொறியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள், “பெரியார் நகர் சாலை தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமானது. மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி உடனடியாக மாநகராட்சியின் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பெரியார் நகரில் உள்ள மேற்கண்ட சாலை நகராட்சியாக இருந்தபோதே அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. பின்னர், மாநகராட்சி கட்டுப்பாட்டில் இப்பகுதி வந்த பிறகு, கடந்த 2015ம் ஆண்டு மாநகராட்சி  நிர்வாகம் சாலை அமைத்தது. அதன்பிறகு பெய்த மழையில் சாலை சேதமடைந்தது. ஆனால், தற்போதுள்ள அதிகாரிகள் சாலையை தனியார் நிர்வாகம் தங்களிடம் ஒப்படைத்ததற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறி, சாலையே போடாமல் காலம் கடத்துகின்றனர். எனவே, உடனடியாக சாலை அமைக்க வேண்டும். இல்லை  என்றால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Tags : stirrers ,road ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...