மினி வேன் மீது பைக் மோதி வாலிபர் பலி

பெரும்புதூர், ஜூன் 19: மினி வேன் மீது பைக் மோதியதில், வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார், வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.பெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வல்லம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் சத்திரியன் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். ஓரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில்  வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை சத்திரியன், தனது பைக்கில் பெரும்புதூர் சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.இந்நிலையில், வல்லம் பகுதியில் உள்ள சாலையில் பைக்குடன் கீழே விழுந்து படுகாயத்துடன் வாலிபர் சடலம் கிடப்பதாக ஓரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில்,  சடலமாக கிடந்த வாலிபர், சத்திரியன் என தெரிந்தது.

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நின்றிருந்த மினி வேன் மீது சத்திரியன்  ஓட்டிவந்த பைக் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து தப்பியோடிய வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED பைக் திருடிய வாலிபர் கைது