தெருவோர கடைகள் அமைக்க விற்பனை மண்டலங்களை விரைந்து கண்டறிய வேண்டும் : மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் தெருவோர கடைகள் அமைப்பதற்கான விற்பனை மண்டலங்களை கண்டறியும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தெருவோர மற்றும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு  இயற்றியது.  இதனை பின்பற்றி தமிழக அரசு கடந்த 2015ம் ஆண்டு சாலையோர  வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது.

இதன்படி சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதன் மூலம் சென்னையில் 39 ஆயிரம் கடைகள் இருப்பது தெரியவந்தது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 9436 பேரும், குறைந்தபட்சமாக  மாதவரத்தில் 521 பேரும் உள்ளனர். இதை தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் நகர விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, நகர விற்பனை குழுக்கள் சம்மந்தப்பட்ட மண்டலங்களில் எவை விற்பனை மண்டலங்கள் என்பதை  அறியும் பணியை தொடங்கின. இதனிடையே, மக்களவை தேர்தல் காரணமாக இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மண்டல அலுவலர்கள் தங்களது பகுதிகளில் எந்த இடங்களில் தெருவோர கடைகளை அமைக்கலாம்,  எந்த இடங்களில் அமைக்க கூடாது என்பதை கண்டறிந்து விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் வியாபாரிகள் அனைவரும் அந்த விற்பனை மண்டலங்களுக்கு மாற்றம்  செய்யப்படுவார்கள்.        

× RELATED தெருவோர கடைகள் அமைக்க விற்பனை...