×

தீண்டாமை கடைப்பிடிக்காத ஊராட்சியாக உசிலங்குளம் தேர்வு

நெல்லை, ஜூன் 19: நெல்லை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத ஊராட்சியாக உசிலங்குளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பரிசாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஷில்பா வழங்கினார். நெல்லை மாவட்டம் குருவிகுளம், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குளம் குக்கிராமம் உள்ளடங்கிய உசிலங்குளம் ஊராட்சி, தீண்டாமை கடைபிடிக்காத ஊராட்சியாக 2018-19ம் ஆண்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசுத் தொகையான ரூ.10 லட்சத்தை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர், கலெக்டர் ஷில்பா கூறியதாவது: செட்டிக்குளம் ஊராட்சியில் அனைவருக்கும் பொதுவான பொது மயானம், உசிலங்குளம் மற்றும் செட்டிகுளம் கிராமங்களில் மயானம் தலா ஒன்று உள்ளது. இம்மயானங்களை இக்கிராம மக்கள் பொதுவாக பயன்படுத்தி வருகின்றனர். பொது கிணறுகளில் அனைத்து சமுதாயத்தினரும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். கோயில்களில் நடைபெறும் விழாக்களில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் தீண்டாமை மற்றும் மதசார்புடைய வழக்குகள் எதுவும் காவல் துறை ஆவணங்களில் இல்லை என்ற விபரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, தீண்டாமை கடைபிடிக்காத ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் பரிசுத்தொகையை பெற வேண்டும். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் னிவாச சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை