×

கிரியம்மாள்புரம்-பத்தல்மேடு சாலை குண்டும் குழியுமாக மாறியது

வீரவநல்லூர், ஜூன் 19: வீரவநல்லூர் அருகே பத்தல்மேடு கிராமத்திற்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரிகேசவநல்லூர் ஊராட்சியில் தாழையடிகாலனி, பத்தல்மேடு, தென்திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இப்பகுதி மக்கள் குண்டும் குழியுமான சாலையால் தினந்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் முக்கூடல் சந்தை, மத்திய அரசின் பீடி தொழிலாளர்கள் நல மருத்துவமனை, பள்ளிகூடம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கூடலுக்கு வருவதற்கு இந்த ஒருவழிப்பாதையே உள்ளது. கிரியம்மாள்புரத்திலிருந்து முக்கூடல் ஆற்றுப்பாலம் வரை சுமார் 2 கி.மீட்டர் தூரம் இச்சாலையானது படு மோசமான நிலையில் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட இந்த சாலையானது தற்போது குண்டும் குழியுமாகி நடக்ககூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட உடனே வரமுடியாத நிலை உள்ளது. சாலை மோசமாக உள்ளதால் பள்ளி வேன்களும் குழந்தைகளை ஏற்றி செல்வதில் சிரமப்பட்டு வருகிறது. மேலும் சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளதால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.

 தென்திருப்புவனம் கிராமத்தில் புகழ்பெற்ற தெட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் குருபகவான் கால்மாற்றி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரசித்திபெற்ற இக்கோயிலும் இவ்வழிப்பாதையில் உள்ளதால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் மோசமான சாலையால் வேதனையடுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக இப்பகுதியில் சாலை வசதி செய்துதரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.கண்டுகொள்ளாத அதிகாரிகள் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கூட்டுறவு வங்கி தலைவர் இருளப்பன் கூறியதாவது, எங்களது பகுதியில் போடப்பட்ட சாலையானது சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தற்போது கிரியம்மாள்புரம் ஊருக்குள் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பத்தல்மேடு கிராமம் வழியாக அரிகேசவநல்லூர் ரோடு வரை தொடர வேண்டும். சாலைகள் படுமோசமாக உள்ளதால் இரவு நேரங்களில் டூவிலிரில் வரும்போது தடுமாறி வயலுக்குள் பாயும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சாலை அமைத்து எங்களுக்கு வழிகாட்டவேண்டும் என்றார்.

Tags : road ,pit ,Kriyamalupuram-Padumedu ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை