×

சாத்தான்குளம் கோர்ட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சாத்தான்குளம், ஜூன் 19:  சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வக்கீல் தொழில் செய்துவரும் ஜேம்ஸ் ஜேசுதுரை, தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மீது,  ஆன்லைனில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தாராம். இதனால் ஆவேசமடைந்த கஜேந்திரன்,  சாத்தான்குளம் நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று வந்து அங்கு நின்றிருந்த வக்கீல் ஜேம்ஸ் ஜேசுதுரைக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து வக்கீல்கள் சங்கத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இன்ஸ்பெக்டர் கஜேந்திரனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாத்தான்குளம் கோர்ட்டில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன், டிஎஸ்பி பாலச்சந்திரன் , சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆகியோர் வக்கீல்கள் சங்க நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வக்கீல்கள் சங்கத் தலைவர்கள் கல்யாண்குமார், ராம்சேகர், வக்கீல் ஜேம்ஸ் ஜேசுதுரை உள்ளிட்டோர் பங்கேற்றபோதும் உடன்பாடு ஏற்படவில்லை.
 அத்துடன் இன்ஸபெக்டர் கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை  தொடர்ந்து நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதோடு மாநில அளவில் போராட்டம் நடத்தவும் வக்கீல்கள் முடிவுசெய்துள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கஜேந்திரனிடம் கேட்டபோது , ‘‘வக்கீல் ஜேம்ஸ் ஜேசுதுரை நன்கு பழக்கமானவர் என்பதால் ஆன்லைனில் புகார் தெரிவிக்காமல் என்னிடம் நேரடியாக புகார் தெரிவித்திருக்கலாமே என்றுதான் கேட்டேன். அவரை மிரட்டவில்லை’’ என்றார்.

Tags : Attorneys ,sathankulam court protest protest ,
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா