திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர், ஜூன் 19: திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிட்டூர், நாச்சியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மின் மோட்டார்கள் பழுதாகியுள்ளதால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர்- ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்னர்.

தகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள், உதவி கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.இதையடுத்து, வாணியம்பாடி தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் வந்து, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags : road ,Tirupattur ,
× RELATED சதாப்தி ரயிலில் குடிநீர் இனி அரை லிட்டர் தான்