×

சுகாதார நிலைய செப்டிக் டேங்க்கில் துர்நாற்றம் வீசுவதால் அவதி

ஈரோடு, ஜூன் 19:  ஈரோட்டில் சுகாதார சீர் கேட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள பொது கழிவறை செப்டிக் டெங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவரகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஈரோடு மாநகராட்சி உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக வீட்டு கழிப்பறைகள், சாக்கடை வசதிகள் போன்றவை குறைந்த அளவே உள்ளது. இந்நிலையில் ராஜாஜிபுரம் சத்தி வீதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப்பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இயங்கி வருகின்றன. இதன் அருகிலேயே பொதுகழிப்பறை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையின் செப்டிக் டேங்குகள் முறையாக திட்டமிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த செப்டிக் டெங்குகளில் அடிக்கடி கழிவுகள் நிரம்பி,  சுகாதார நிலைய வளாகத்திற்கு வந்து தேங்கி விடுகிறது. இதன் காரணமாக ஏற்படும் சுகாதார சீர்கேட்டாலும், துர்நாற்றத்தாலும் சுகாதார நிலைய செவிலியர்கள், மருத்துவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும், இதேபோல் கழிவுகள் தேங்கியதால், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். இந்த மையத்தின் செவிலியர்கள், ஈரோடு காவேரி ரோட்டில் உள்ள அரசின் ஆயுர்வேத மருத்துவமனையிலேயே அலுவலகம் அமைத்து, மக்களுக்கு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தாலும், சுகாதார சீர்கேட்டாலும் தொடர்ந்து அங்கன் வாடிமையத்தில் படிக்கும் குழந்தைகளும், தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘செப்டிக் டேங், அடிக்கடி நிரம்பி கழிவு நீர், சுகாதார நிலையத்திற்கு வந்து தேங்கி விடும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் லாரிகள் மூலம் வந்து சுத்தப்படுத்துவார்கள். ஆனால் துர்நாற்றம் தொடர்ந்து வீசி கொண்டே தான் இருக்கும். இந்த பிரச்னையை காரணமாக வைத்து பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறி, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த மையத்திற்கு வருவது கிடையாது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட, அவர்கள் வீடுகளுக்கே சென்று செவிலியர்கள் போட்டு விட்டு செல்கின்றனர்.
நாங்களும் அவசர பிரச்னை என்றால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று விடுகிறோம். இங்கு சுகாதார நிலையம் அமைத்தும் எங்களுக்கு பலன் அளிக்கவில்லை. நாங்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் பழி சொல்லவில்லை, அவர்களுக்கு ஏற்ற சுகாதாரமான சூழலை அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், அங்கன்வாடி, தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவிகளும் துர்நாற்றத்திலேயே தான் படித்து வருகின்றனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் செப்டிக் டேங்கை மாற்று இடத்தில் முறையாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : health center ,
× RELATED சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு