50 கடைகளில் நடத்திய ஆய்வில் 100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஈரோடு, ஜூன் 19: தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வன், உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மாநகராட்சி பகுதிகளில் புது மஜீத் வீதி, கடைவீதி, கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 50 கடைகளில் ஆய்வு செய்ததில் அங்கு 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி கூறியதாவது: 50 கடைகளில் ஆய்வு நடத்தி 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், 15க்கும் மேற்பட்ட ஓட்டலில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம்.

ஓட்டல்களில் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்காக அனுபப்பட்டுள்ளது. நொறுக்கு தீனி வகைகளில் உள்ள பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி, நிறுவனத்தின் பெயர், விலை போன்றவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்த தகவல் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளோம். ஈரோடு மாநகர பகுதிகளில் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம். தமிழக அரசு அறிவித்துள்ள 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு கலைவாணி கூறினார்.ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுப்பு: ஈரோடு கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதியில் உள்ள பிளாஸ்டிக் பை விற்பனை செய்யும் கடைக்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆய்வுக்கு சென்றார். அங்கு பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிகமாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் ஸ்ரீபால் என்பவரிடம் விசாரித்தார். தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளா என விசாரித்தபோது முறையாக பதில் அளிக்காமல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர் சங்க நிர்வாகிகளை அழைப்பதிலேயே குறியாக இருந்தார். கடை உரிமையாளர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து விட்டார்.அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக ஆய்வுக்கு சென்றபோது அங்கு சங்க நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் செல்போனில் படம் பிடித்தபடியும், மிரட்டும் வகையில் சங்க நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

Related Stories: