குன்னூர் ஐயப்பன் கோயில் 41 நாள் மண்டல பூஜை நிறைவு விழா

குன்னூர், ஜூன் 19:  குன்னூர் ஐயப்பன் கோயில் கும்பாபிேஷக 41 நாள் மண்டல பூஜை நிறைவு விழா இன்று (19ம் தேதி) நடக்கிறது.  குன்னூரில்  கடந்த 1953ம் ஆண்டு முதல் ஐயப்பன் விளக்கு திருவிழா, மண்டல பூஜை,  திருவீதி உலா நடந்து வந்தது. குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து  உழவர் சந்தை செல்லும் சாலையில் கடந்த 1965ம் ஆண்டு பீடம் அமைத்து ஐயப்ப  வழிபாடு துவங்கியது. 1966ம் ஆண்டு சிறிய கோயில் மூலஸ்தானம் அமைக்கப்பட்டது. 1967  பதினெட்டாம் படி கட்டப்பட்டது. மேலும் கடந்த 1986ம் ஆண்டு ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  இந்நிலையில் இந்தாண்டு குன்னூர் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா  கடந்த மாதம் 6ம் தேதியன்று துவங்கியது. 7ம் தேதி அஸ்தர கலச பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து  கலச பூஜை, மகா தீபாராதனை நடந்தது. 8 மற்றும் 9ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தது.

  இதை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 10ம் தேதி காலை 10  மணியில் இருந்து 11 மணிக்குள் குன்னூர் ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது. இதில் குன்னூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 12ம் தேதியன்று திருவிளக்கு  பூஜை மற்றும் செண்டை மேளத்துடன் ஐயப்பசுவாமி திருவீதி உலா நடந்தது.  கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பஸ் நிலையம், சித்தி விநாயகர் ஆலயம்,  கேஷ்பஜார், காமராஜர் சிலை, டி.டி.ேக., சாலை, மவுண்ட் ரோடு, பெட்போர்டு  உள்ளிட்ட பகுதி வழியாக கோயிலை சென்றடைந்தது. பின்னர் இரவு வாணவேடிக்கை  நிகழ்ச்சி நடந்தது. மேலும் ஐயப்பன் கோயில் புதிதாக அமைய உள்ள கணபதி,  சிவபெருமான், விஷ்ணு, பகவதியம்மன், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், நவகிரக  சன்னதிகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனிடையே குன்னூர்  ஐயப்பன் கோயில் 41 நாள் மண்டல பூஜை நிறைவு விழா இன்று (19ம்  தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு  மேல் உஷபூஜையும், அதனை தொடர்ந்து 11 மணியளவில் அபிஷேகம், அலங்கார பூஜை, மகா  தீபாராதனை நடைபெறும். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஐய்யப்ப பக்தர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும்  ஸ்தாபகர் சங்கரதாஸ் சுவாமி ஆகியோர் செய்துள்ளனர்.

× RELATED ரூ.41 கோடி நிலுவை தொகை வழங்காததால்...