குந்தாவில் வருவாய் தீர்வாய கூட்டம்

மஞ்சூர், ஜூன் 19:  குந்தா தாலுகாவில் நடந்த வருவாய் தீர்வாய கூட்டத்தில் பெரும்பாலான அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் அதிருப்தி ஏற்பட்டது.    நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை தாங்கினார். குந்தா தாசில்தார் சரவணன் வரவேற்றார். முதல் நாளான நேற்று குந்தா உள்வட்டம் கீழ்குந்தா பிர்காவிற்கான கூட்டம் நடந்தது. இதில் கீழ்குந்தா, கிண்ணக்கொரை, பாலகொலா, மேல்குந்தா ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். பெரும்பாலும் முதியோர் உதவி தொகைகளை வழங்க கோரி ஏராளமானோர் மனு அளித்திருந்தனர். இதேபோல் வீட்டு மனைப்பட்டா, குடிநீர், சாலைவசதி, தடுப்புசுவர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரியும் பொதுமக்கள் தரப்பில் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.  இக்கூட்டத்தில் ஆர்.டி.ஓ சுரேஷ் பேசியதாவது: விவசாயிகளுக்கான மத்திய அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுடன் 5ஏக்கருக்கும் மேல் வைத்துள்ள பெருவிவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் வருவாய் ஆய்வாளர் ராமசுப்பு, கவுசல்யா, கிராமநிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார் ஐயப்பன், ராஜன் மற்றும் வருவாய் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  நேற்று நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் பேரூராட்சி, மின்வாரியம், காவல்துறை, வனத்துறை, போக்குவரத்து, குழந்தைகள் வளர்ச்சி துறை உள்ளிட்ட பெரும்பாலான அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிகாரிகளுக்கு பதிலாக அவர்களின் பிரதிநிதிகளாக இளநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்களே பங்கேற்றனர். துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறும்படி அழைப்பு விடுத்த போது ஊழியர்கள் தங்களது துறை குறித்து ஒருவரியில் பதில் கூறி சென்றதால் ஜமாபந்தி கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.  

× RELATED பாளையம் மகாமாரியம்மன் கோயிலில்...