ஏரி நடைபாதையில் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

ஊட்டி, ஜூன் 19:  ஊட்டி படகு இல்ல வளாகத்தில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள நடைபாதை பராமரிப்பின்றி பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் காணப்படுவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஊட்டி ஏரியில் சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் படகு இல்லம் உள்ளது. இப்படகு இல்லத்தில் மிதிபடகுகள், துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் உள்ளன. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ஊட்டி படகு இல்லத்தில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உள்ள பகுதியில் இருந்து ஏரியை ஒட்டி சிறு நடைபாதை உள்ளது. படகு இல்லத்திற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடைபயணம் மேற்கொண்டு ஏரியின் அழகை ரசிப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைபாதை அமைக்கப்பட்டது. அதன் பின்பு பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரி நடைபாதை சீரமைக்கப்பட்டது.

 இந்நிலையில் காந்தல் சாலையோரத்தில் படகு இல்லத்தை சுற்றிலும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் தடுப்பு வேலிகள் வழியாக உள்ளே புகுபவர்கள் ஏரி நடைபாதை பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதி மாசடைந்துள்ளது. படகு சவாரிக்காக சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் லைப் ஜாக்கெட்டுகளும் வனத்திற்குள் கிடக்கிறது. இதேபோல் நடைபாதையில் அமைந்துள்ள சிறு வனத்திற்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளும் அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஜூஸ் போடப்பட்ட பின்பு வீணாகும் கரும்பு சக்கைகள் போன்றவைகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியை தூய்மைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : lake sidewalk ,
× RELATED சுகாதார சீர்கேட்டை கண்டித்து...