பொள்ளாச்சி, ஆனைமலையில் முதல் நாள் ஜமாபந்தியில் 1069 மனுக்கள் பெறப்பட்டது

பொள்ளாச்சி, ஜூன் 19:    பொள்ளாச்சி வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. இதற்கு, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கி, பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலினை செய்தார். வருவாய்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்வட்டத்திற்குட்பட்ட  புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், தேவம்பாடி, ராமபட்டினம், மண்ணூர், தாளக்கரை, முத்தூர், போடிபாளையம், குளத்தூர், ராசிசெட்டிபாளையம், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, திம்மம்குத்து, குமாரபாளையம் உள்ளிட்ட 16 கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர்.  
ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஜமாபந்தி என்பதால் காலை முதலே பொதுமக்கள், தாலுகா அலுவலகத்திற்கு வர துவங்கினர். பின் ஒவ்வொருவராக தங்கள் மனுக்களை மனு பெறும் அதிகாரியிடம் கொடுத்தனர். மனுவை கொடுத்த பொதுமக்களிடம், மனு குறித்து விளக்கமும் கேட்கப்பட்டது. இந்த ஜமாபந்தியின்போது முதியோர் உதவித் தொகை கோரி 144 பேர், இலவச வீட்டு மனைப்பட்டா கோரி 62 பேர், பட்டா மாறுதல் கோரி 28 பேர், நத்தம்பட்டா கோரி 14பேர், உட்பிரிவு கோரி 2பேர், நில அளவை கோரி 11பேர், இதர மனுக்கள் தொடர்பாக 16 பேர் என மொத்தம் 277 மனுக்கள் பெறப்பட்டது.

 இதில் முதியோர் உதவித்தொகை கோரிய மனுக்களில் 4, நத்தம் பட்டா கோரிய 5 மனுக்கள், வீட்டுமனைபட்டா கோரிய மனுக்களில் 4 மனுக்கள் என மொத்தம் 13மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.  இன்று(19ம் தேதி) வடக்கு உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை: தாலுகாவில் நேற்று, முதல் ஜமாபந்தி துவங்கியது. இதில் 792மனுக்கள் பெறப்பட்டது.
ஆனைமலை மற்றும் மார்ச்சநாயக்கன்பாளையம், கோட்டூர் ஆகிய உள்வட்டங்கள் அடங்கியுள்ளது. இந்த தாலுகாவில், முதன் முறையாக ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது.  முதல் நாள் ஜமாபந்தியின்போது ஆனைமலை உள்வட்டத்திற்குட்பட்ட பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துரை, தென்சங்கம்பாளையம், ஆனைமலை, ஒடையக்குளம், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளறாக மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அமுதன் பங்கேற்று மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த ஜமாபந்தியின் போது முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,  பட்டா மாறுதல், நத்தம்பட்டா, உட்பிரிவு, நில அளவை, குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் என இதர மனுக்கள் உள்ளிட்ட மொத்தம் 792 மனுக்கள் பெறப்பட்டது.  அதைதொடர்ந்து இன்று(19ம் தேதி) மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Tags : Pollachi ,petitions ,Anamalai ,
× RELATED பொள்ளாச்சி அருகே மலைக் கிராமத்தில்...