கோவை அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்கு 6 ஆண்டுகளில் 2.43 லட்சம் பேருக்கு சிகிச்சை

கோவை, ஜூன் 19: கோவை அரசு மருத்துவமனையில் நாய்க்கடி காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் 2.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். நாய் கடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவு உள்ளது. இதன் மூலம் நாய்க்கடிக்கு தடுப்பூசி போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த, 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கோவை அரசு மருத்துவமனையில் நாய்கடிக்கு 2 லட்சத்து 43 ஆயிரத்து 672 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ‘‘ராபிஸ் பாதிப்பு ஏற்பட்ட நாய் தாக்கினால் உயிரிழப்பு நிச்சயம். வெறிநாய் கடித்தால் தண்ணீரை கண்டால் வலிப்பு, உடல் நடுக்கம் ஏற்படும். இதற்கு, தடுப்பூசி மட்டுமே தீர்வு. வீரோ ரேப் என்ற மருந்தை 6 முறை ஊசி மூலம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகளும் இந்த ஊசியை போடலாம். வெறிநாய் கடித்த இடத்தில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமிநாசினி அல்லது ‘ஸ்பிரிட்’ கொண்டு காயத்தை துடைக்கலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டுப்போட கூடாது. மேலும், வீட்டில் மற்றும் தெருவில் இருக்கும் நாய்கள் என எந்த நாய் கடித்தாலும், உடனடியாக அரசு மருத்துவமனை அணுகி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்’ என்றார்.

× RELATED திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி துவங்க கோரிக்கை