கோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு துணிகர அபேஸ்

புதுச்சேரி, ஜூன் 19:  கோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.  விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த சிறுவந்தாடு மேற்கு வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மனைவி சந்திரா(60). உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சமபவத்தன்று தனியாக கோரிமேடு ஜிப்மருக்கு வந்தார். அங்கு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவு இயங்காத நிலையில் ஏமாற்றமடைந்த அவர், உடனே கோரிமேடு பஸ் நிறுத்தத்திற்கு வந்து தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரி புதிய பஸ் நிலையம் சென்றுள்ளார். அப்போது பஸ்சில் அவரை சுற்றி 3 பெண்கள் நெறித்தபடி நின்றிருந்ததாக கூறப்படுகிறது. முருகா தியேட்டர் பஸ் நிறுத்தம் வந்ததும் அந்த பெண்கள் கீழே இறங்கிவிட்ட நிலையில், பிரேமா பஸ் நிலையம் சென்றதும் தனது கழுத்தை பார்த்துள்ளார்.

 அதுசமயம் தான் அணிந்திருந்த 2 பவுன் தாலிசரடு மாயமாகி இருப்பதைக் கண்டு கூச்சலிட்டார். சக பயணிகள் அவரிடம் விசாரித்தபோது தன்னை சூழ்ந்து நின்ற 3 பெண்கள் நகையை பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அவர் கூறியதையடுத்து அருகிலுள்ள உருளையன்பேட்டை போலீசில் முறையிடப்பட்டது.அவர்கள் சம்பவம் நடந்த பகுதி கோரிமேடு காவல் சரகத்திற்குட்பட்டது என்பதால் சந்திராவை கோரிமேட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த சந்திரா, போலீசாரிடம் புகார் மனுவை அளித்தார். அதை பெற்றுக் கொண்ட எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். சந்திராவிடம் நகை அபேஸ் செய்த 3 பெண்களையும் தேடி வருகின்றனர்.
Advertising
Advertising

 புதுவையில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதனிடையே ஓடும் பஸ்சில் பெண் நோயாளியிடம் தாலிசரடு அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: