×

திருபுவனையில் பரபரப்பு மின்துறை அலுவலகம் முற்றுகை

திருபுவனை, ஜூன் 19: திருபுவனை மின்துறை அலுவலகத்தை எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு உதவி பொறியாளருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின்சாரம் தொடர்பாக அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பல கிராமங்களில் மின்வெட்டு ஏற்படுவதுடன், தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை. மேலும் கிராமங்களில் உள்ள வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் கிராமங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வயலுக்கு சென்ற 2 விவசாயிகள், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை மிதித்து, மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.
இதனால் திருபுவனை வட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மின்துறையின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், திருபுவனை தொகுதி கோபிகா எம்எல்ஏ நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் திருபுவனையில் உள்ள மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொகுதியில் உள்ள தெரு மின்விளக்குகள் எரியாதது, மின் கம்பங்கள், மின் கம்பிகள் பழுதாகி உள்ளது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேட்டு உதவி பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அடுக்கடுக்காக தெரிவித்தனர். செல்லிப்பட்டு பகுதியில் குறை மின்னழுத்தம் நிலவுவதால் மின்மாற்றி வைக்க வேண்டும். வம்புப்பட்டு முருகவரம் தெருவில் 7 தெரு விளக்கு எரியவில்லை. புதிய தெருவிளக்குகள் அமைப்பதோடு, புதிய மின்மாற்றியும் அமைக்க வேண்டும். அதேபோல சன்னியாசிக்குப்பம் பகுதியிலும் புதிய மின்மாற்றி வைக்க வேண்டும். திருபுவனை ஓட்டையர் வீதியில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. மதகடிப்பட்டுபாளையம், திருபுவனைபாளையம் தெரு மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. கஸ்தூரிபாய் நகர், சேது நகர் பகுதியில் தாழ்வாக உள்ள மின்கம்பி இழுத்து கட்டவேண்டும். மதகடிப்பட்டு-புதுநகர், கோகுல்நகர் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும். நல்லூர் ஈஸ்வரன் நகரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை இழுத்து கட்ட வேண்டும். குச்சிபாளையம், சிலுக்காரிப்பாளையம் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால்  உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்கவேண்டும், என அடுக்கடுக்காக குறைகளை கூறினர்.ஒரு கட்டத்தில் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஆவேசமாகி, இப்பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். திருபுவனை தொகுதியில் அதிக மின்கட்டணம் வசூலாகிறது. ஆனால் தெரு மின்விளக்குகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பிகளை முறையாக பராமரிப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

அதற்கு, உதவி பொறியாளர்கள் பன்னீர்செல்வம் (திருபுவனை), ராதாகிருஷ்ணன் (திருவண்டார்கோவில்), தாமரைவாசன் (வாதானூர்) ஆகியோர் தங்களிடம் போதிய தளவாட பொருட்கள் இல்லாத காரணத்தால் குறைகளை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என பதிலளித்தனர்.இதற்கு கோபிகா எம்எல்ஏ, அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து நிதி உதவி பெற்று மின்துறை சம்பந்தமான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மேற்கண்ட பகுதிகளில் நிலவும் மின்துறை சம்பந்தமான குறைகளை எழுத்து பூர்வமாக அவரிடம் அளித்தார். மின்கம்பங்கள், மின் விளக்குகள், புதிய மின்மாற்றிகள் அமைத்து மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும். வருங்காலம் மழைக்காலம் என்பதால் மின்கம்பிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க புதிதாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.அனைத்து குறைகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருபுவனை மின்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,sensitivity department office ,corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு